புதன், 30 செப்டம்பர், 2015

தூய்மை இந்தியா இயக்கம்



சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி. பெங்களூரே அல்லலோல கல்லோலம்! அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குண்டு கட்டாக ஒரே பிளாஸ்டிக் பையில் கட்டி குப்பை வண்டியில்  (பாதி வண்டியில் மீதி கீழே!)  போடக் கூடாது என்று பெங்களூரு மஹா நகர பாலிகே கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தது. ஆளுக்கு ஒரு குப்பை பையைச் சுமந்து கொண்டு எங்கே போடுவது என்று திக்குத் தெரியாமல் அலைந்தோம். ஓர் வீட்டில் இத்தனை அமர்க்களம் என்றால் ஒரு நாட்டை சுத்தப் படுத்துவது என்பது சாமானிய காரியமா?


2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மிகவும் வியப்பான நிகழ்வுகள் இந்தியாவின் பொதுவிடங்களில் நிகழ்ந்தன. நாட்டின் பிரதம மந்திரியிலிருந்து வட்டம், மாவட்டம் என்று குட்டிக்குட்டி தலைவர்கள், அந்தந்த பகுதிகளின் சின்னச்சின்ன பிரபலங்கள் எல்லோரும் துடைப்பமும் கையுமாக வீதிகளில் இறங்கினர்! தொலைக்காட்சிகளுக்கு நல்ல தீனி! நடிக நடிகையரிலிருந்து அவர்கள் வீட்டு நாய்க்குட்டி வரை கையில் துடைப்பத்துடன் காட்சி தந்தனர்.

காந்திய வழியில் நமது பிரதமர் திரு மோதி கையில் துடைப்பத்துடன் ‘சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்’ என்று சொல்லி தெருவில் இறங்கியதை நாடே தொலைக்காட்சி முன் அமர்ந்து திறந்த வாயில் ஈ புகுந்தது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லாம் ‘தூய்மை இந்தியா’ என்னும் இயக்கத்திற்காக நிகழ்ந்தவை.

சுமார் 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ‘இந்தியாவை சுத்தப்படுத்துவோம்’ என்று உறுதிமொழி எடுத்தனர். சமூக தளங்களும் தங்கள் பங்கிற்கு ஜோக்குகள், கேலிச்சித்திரங்கள், உறுதிப்பத்திரங்களில் கையெழுத்து என்று இறங்கின. எல்லாம் சிறிது நாட்கள்தான். தெருவோரங்களில் இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்குபவர்கள் தங்கள் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.  இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் தூக்கி எறிந்துவிட்டு சட்டென்று மறைந்தனர்.

எப்படி நமது கிராமங்களின், நகரங்களின் கழிவுகளை அகற்றவது? பொதுமக்களின் பணத்தைக் கொட்டி கழிப்பறைகள் கட்டுவதால் பலன் இருக்குமா? கழிப்பறைகளை சரியாகப் பயன்படுத்தாமல் அவை பயன்பாட்டிற்கு ஒவ்வாத நிலைக்குத் தள்ளப்பட்டால் என்ன செய்வது? மறுபடி மரத்தடியிலும், புதர்களின் மறைவிலும் போய் உட்காருவார்களா? தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதை எப்படித் தடுப்பது? நமது நகரங்கள் தினந்தோறும் வெளியே தள்ளும் கழிவுகளை கூட்டிப் பெருக்கி மறைக்க ஒரு மிகப்பெரிய தரைவிரிப்பு எங்கே கிடைக்கும்? சுத்தமான இந்தியா என்பது வெறும் கனவாகவே நின்றுவிடுமா? இந்த மிகப்பெரிய கனவு நனவுபட பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள்!

அரசு தரப்பில் இதுபோல முன்முயற்சி எடுப்பது இது முதல் தடவை அல்ல. ஊரக சுகாதார வசதி திட்டம் 80களில் ஆரம்பிக்கப்பட்டு 1999 இல் ஒட்டுமொத்த துப்புரவு இயக்கமாக புனரமைப்பு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் மிகத் துப்புரவுடன் இருக்கும், பஞ்சாயத்துகள், தொகுதிகள், மாநிலங்கள் ஆகியவற்றிற்கு ‘நிர்மல் கிராம் புரஸ்கார்’ என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்த அமைப்பு 2012 இல் நிர்மல் பாரத் அபிக்யான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கமாக மாறியிருக்கிறது. இந்தமுறை நிறைய நிதி ஒதுக்கப்பட்டு அதிக அளவில் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். புதுமாதிரியான வழிமுறைகளை கண்டுபிடித்து செயல்முறைப்படுத்த உள்ளனர். சமூக வலைத்தளங்களும் தூய்மை இந்தியா இயக்கத்தின் செய்தியைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கின்றன. நமது திருவிழாக்கள் மூலம் தூய்மை இந்தியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். குடிநீர், சுகாதார அமைச்சரகம் ஒரு புதிய பிரச்சாரத்தை ‘சுத்தமான இந்தியாவும், பாதுகாப்பான குடிநீரும்’ என்ற பெயரில் திருவிழாக்களில் நடத்த இருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியத் திருவிழாக்கள் -  மீனாக்ஷி கல்யாணம் நடக்கும் மதுரை, அமர்நாத் யாத்திரை, பூரி ஜகன்னாத் தேர்த்திருவிழா, மகாராஷ்டிரா பந்தர்பூர் பால்கி யாத்திரை, பீகாரின் சோனேபூர் மாட்டுச்சந்தை – போன்றவிடங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற உள்ளது.


2019 ஆம் ஆண்டிற்குள் இந்த இயக்கம் சாதிக்க விரும்பும் சில விஷயங்கள்:

  •   சுகாதாரக் கழிவறைகள் எல்லா வீடுகளிலும் அரசு மான்யத்துடன் அமைப்பது.
  • ஏற்கனவே இருக்கும் உலர் கழிப்பறைகளை சுகாதாரக் கழிப்பறைகளாக மாற்றுவது.
  • கிராம சுகாதார மையங்கள் – கைப்பம்புகள், குளிக்கவும், துணி துவைக்கவும் வசதியுடன். 
  • தனியார் வீடுகளில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத இடங்களில் கிராமப் பஞ்சாயத்துகளின் (இவற்றைப் பராமரிக்க) ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.
  •  சாக்கடைகள் கட்டுதல்,  திட மற்றும் நீர்மக் கழிவுகளை அகற்ற உதவி செய்தல்.



இந்தமுறை நமக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அரசின் நடவடிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவருவதாகவும், முன்னேற்றங்கள் நீண்ட நாட்களுக்கு நிலைப்பதாகவும் இருப்பதுதான்.  இன்னும் சில வளர்ந்துவரும் நாடுகளிலும் மனிதர்கள் திறந்தவெளிகளை கழிவறையாகப் பயன்படுத்தினாலும், நம் நாட்டில் தான் மிகப்பெரிய அளவில் இது நடைபெற்று வருகிறது. இதனால் இந்தத் தூய்மை இயக்கம் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் சுமார் 600 மில்லியன் இந்தியர்களுக்கு  – வேறு வழியில்லாமல் இதுவரை திறந்தவெளிகளை கழிப்பறையாக பயன்படுத்தி வந்தவர்களுக்கு – ஃப்ளஷ் கழிவறைகள் கட்டித் தரப்படும்.


ஆனால் இப்படிக் கட்டித்தரப்படும் கழிவறைகளை அவர்கள் சரிவர பயன்படுத்தவிடில் என்ன ஆகும்? இதைப்பற்றி இந்தத் திட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் தூய்மை இந்தியா இயக்கம் வெற்றிபெற நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கு பெற வேண்டும். நாம் செலுத்தும் வரிப்பணம் தான் இத்தகைய திட்டங்களாக மாறுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்கம் என்பது நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளைக் கொண்டே இயங்குகிறது. பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுடன் நம் கடமை முடிவதில்லை. அவர்களை தட்டிக் கேட்கும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


இந்தியக் குடிமக்களாகிய நாம் எந்தவகையில் இந்த தூய்மை திட்டத்திற்கு உதவலாம்?


  • சிலசமயம் நாம் நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்: நமக்கு முன்னால் செல்லும் கார் சாலையோரமாக நிறுத்தப்படும். அதிலிருந்து மிகவும் நாகரீகமான பெண்மணி இறங்கி தன் குழந்தையை திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வைப்பார். அல்லது தாங்கள் சாப்பிட்ட குப்பைகளை போகிற போக்கில் அப்படியே காரின் ஜன்னல் வழியே வீசிக் கடாசுவார்கள். இவர்களை எப்படித் திருத்துவது? தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் இதைப்போலச் செய்வோர்களை கைதட்டி அவமானப்படுத்துவது போலக் காட்டுகிறார்கள். நாமும் இதைச் செய்யலாம். நமது வீடுகள் மட்டுமன்றி நமது சுற்றுப்புறங்களும் தூய்மையாக இருந்தால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • நம்மைப் போன்றவர்கள் நமக்கென்ன என்று இருக்காமல், நம்மை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் பொதுவிடத்தில் குப்பைகளைப் போடும்போது நான் ஒருத்தி மட்டும் போடாவிட்டால் இந்த நாடு திருந்திவிடுமா என்று கேள்விகள் கேட்கக்கூடாது.
  • நம் வீட்டினுள் இருக்கும் சுத்தம் நம் வீட்டைச் சுற்றியும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைக்கப்படும் குழுக்கள் அவர்கள் குடியிருப்புகளை மட்டுமின்றி அவர்களது தெருக்களையும் தூய்மையாக வைத்திருக்க முயற்சிகள் எடுக்கலாம்.
  • அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கேலி செய்வது நம்மில் பலருக்கும் கைவந்த கலை. ‘ஆமா, இந்த அரசு வந்து என்ன கிழிக்கப் போவுது?’ என்று கேட்பவர்கள் நம்மிடையே அதிகம். நம்முடைய இந்த அழுக்கான மனப்பான்மை மாறினால் இந்தியா தூய்மை ஆகும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோருமே ஒன்று கூடித் தேரிழுக்க வேண்டும்.



பலநாடுகளிலும் இந்த சுகாதாரப் பிரச்னை இருக்கின்றது. பசிபிக் கடலில் எறியப்படும் பிளாஸ்டிக்குகள் எல்லாம் சேர்ந்து பல மைல்கள் தூரத்திற்கு பிளாஸ்டிக் தீவுகளாக மாறியிருக்கின்றன. எவரெஸ்ட் சிகரமும் நம்மால் குப்பைத்தொட்டி ஆகிவிட்டது. இன்னும் சிலவருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தைவிட மலையேறுபவர்கள் விட்டுவிட்டு வரும் குப்பைகளின் சிகரம் உயர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த வயிற்றெரிச்சலை எங்கு போய்ச் சொல்ல? சீன தேசத்தின் பெரும்சுவர் 30% காணாமல் போய்விட்டது. மனிதர்களின் பேராசையின் விளைவால் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. கேதார்நாத்தில் அரசின் எச்சரிக்கையையும் மீறி உணவகங்களும், தங்குமிடங்களும் கட்டப்பட்டதால் நிகழ்ந்த நிகழ்வுகள் நம்மால் மறக்க முடியாத ஒன்று. திடீர் வெள்ளமும், பாறைச்சரிவுகளும் இமாலயப் பகுதிகளில் பெருகிவிட்டன.


நதி நீரை வாகனங்களை கழுவுவதற்கும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், தீயணைப்பு வண்டிகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளில் கலப்பதை தடுக்க வேண்டும். இவற்றால் நம் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதை எடுத்துக் கூற வேண்டும். பொதுமக்கள் சிறுசிறு குழுக்களாக அமைத்துக் கொண்டு தங்கள் பகுதிகளில் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி இதுபோன்று சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கலாம். சுற்றுப்புறம் மாசுபடுவதால் மனிதர்கள் மட்டுமல்ல; நம்மைச் சுற்றி உள்ள சிறுசிறு பறவையினங்கள், விலங்குகள் இவையும் பாதிக்கப்படுகின்றன.


இந்த உலகம் நாம் வாழ மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ள கோடிக்கணக்கான உயிரினங்களும் வாழத்தான் படைக்கப்பட்டுள்ளது. நம் வீட்டையும், நாட்டையும் சுத்தமாக வைத்திருந்து அடுத்த தலைமுறையினருக்கு சுத்தமான இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.


வாழ்க இந்தியா! வாழ்க அதன் இயற்கைவளங்கள்! நாளைய இந்தியா தூய்மையான இந்தியாவாக மலரட்டும்!


 ---------------------*----------------------------------------*-------------------------------------*-------------------------------------*


வலைப்பதிவர் திருவிழா-2015மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(2) சுற்றுச்சூழல் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்