செவ்வாய், 22 டிசம்பர், 2015

ஓங்கி உலகளந்த உத்தமன்


திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் வல்லபதேவனின் நினைவில் வந்து போனது. தானே அதை சேவிக்கலாமா என்று நினைத்தவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் பாடல் அவர் திருவாயிலிருந்தே வரட்டும் என்று காத்திருந்தான். அவரோ கோதையின் குணானுபவங்களில் ஈடுபட்டு அதிலிருந்து வெளி வர முடியாமல் கண்களில் நீர் மல்க உட்கார்ந்திருந்தார்.
இவரை இந்த உலகிற்கு மறுபடியும் அழைத்து வர வேண்டுமெனில் தான் செய்யவேண்டியது என்ன என்று உணர்ந்த வல்லபதேவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப
பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம் பாவாய்!

‘மிகச் சிறப்பாகப் பாடுகிறாய், வல்லபா...!’ என்று அவன் பாடியவிதத்தை சிலாகித்த பெரியாழ்வார் தொடர்ந்தார்:
‘கண்ணன் எம்பெருமானின் அவதாரங்களில் கோதைக்கு மிகவும் பிடித்த அவதாரம் இந்த ஓங்கி உலகளந்த அவதாரம். தனது நாச்சியார் திருமொழியில் காமதேவனிடம் ‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்’ செய்’ என்கிறாள்.

நான் அவளிடம் ‘அப்படி என்ன ஒரு ஈர்ப்பு உனக்கு இந்தத் திரிவிக்கிரமன் மேல்’ என்று கேட்டதற்கு அவள் கூறிய பதில் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது!’
‘என் தலைமேல் உனது திருவடியை வைக்க வேணும் என்று யாரும் கேட்காமலேயே அனைவர் தலையிலும் தன் திருவடியை வைத்தான் இவன். இவன் அப்படி உலகத்தை அளந்த அன்று சிலர் நாம் இழந்த மண் நமக்குக் கிடைத்தது என்று மகிழ்ந்தனர்; சிலரோ நமக்குச் சொந்தமான மண் நம் கைவிட்டுப் போனதே என்று வருந்தினர். ஆனால் யாருமே அந்தத் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடவில்லை, அப்பா! அந்தக் குறை தீர நாங்கள் அந்த உத்தமனின் பேர் பாடுகிறோம்’ என்றாள்.

ஓங்கி: இந்த பதத்தாலே அவன் வாமனனாயிருந்து சட்டென்று வளர்ந்த விதம் சொல்லப்படுகிறது. எப்படி என்றால் சத்யலோகம் வரை சென்ற திருவடியை விளக்க நான்முகன் வார்த்த கமண்டல நீரும், மகாபலி வார்த்த தான நீரும் ஒன்றாகச் சேர்ந்து விழுந்தனவாம்!

உலகளந்த: ஜீவாத்மாக்களுக்கும், பரமாத்மாவான தனக்கும் உள்ள சம்மந்தம் ஒன்று மட்டுமே காரணமாக இந்தப் பூவுலகில் உள்ள அனைவரின் தலை மேலும் தனது திருவடி படும்படியாக அளந்தான். அழகிலும், அற்புதமான செய்கைகளிலும் வாமனனுக்கும், கண்ணனுக்கும் ஒற்றுமை இருப்பதால் இங்கு வாமனாவதாரத்தைப் பாடுகிறார்கள்.

உத்தமன்: மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பரமன் இந்திரன் முதலான தேவர்களுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு வாமனன் ஆனான். அவர்களுக்காக யாசித்தான். இவனல்லவோ உத்தமன்!

பேர்பாடி: முதல் பாட்டில் நாராயணன் என்று சொல்லி, இரண்டாம் பாட்டில் அவனது குணபூர்த்தியை சொல்லும் பரமன் என்ற பெயரைச் சொல்லிப் பாடியவர்கள் அந்த நாராயணனே இன்று திரிவிக்கிரமன் ஆகி உலகளந்தான் என்று பாடுகிறார்கள். உலகமெல்லாம் அளந்ததினால் அந்த நாராயணனின் எங்கும் நிறைந்த தன்மை பேசப்படுகிறது. திருமந்திரத்தின் பெருமை இங்கு பேசப்படுகிறது.
நாங்கள்: அவனுடைய திருநாமங்களைச் சொல்லிப் பாடும் நாங்கள். திருநாமங்களைச் சொல்லாவிட்டால் வாழாத நாங்கள்.
நம் பாவைக்கு: இப்படிப்பட்ட நாங்கள் செய்யும் இந்த நோன்பிற்கு. இது உபாயரூபம் அல்லாமல், பயனாக இருக்கும்.
பாவைக்குச் சாற்றி நீராடினால்: நோன்பு என்று ஓர் பெயரை வைத்துக் கொண்டு கண்ணனுடன் கூடுவது. தமிழ் அகத்துறையில் கலவியை நீராடலாகக் கூறுவார்கள்.
தீங்கின்றி: வியாதி, பஞ்சம், திருட்டு போன்ற கேடுகள் இல்லாமல்
நாடெல்லாம்: இந்த ஊரில் மட்டுமல்லாமல் இந்த நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து: ஒரு நாள் மழை, ஒன்பது நாள் வெயில் என்பது போல. மழையே இல்லாமலும் இருக்கக்கூடாது. அதிக மழையும் கூடாது. அளவாக மாதம் மூன்று முறை மழை.
ஒங்குபெரும் செந்நெல் ஊடு கயலுகள: ஓங்கி உலகளந்தவனைப் போலவே இங்கு செந்நெல் பயிரும் ஓங்கி வளர்ந்திருக்கிறது. உயர்ந்து பெருத்து வளர்ந்திருக்கும் செந்நெல் பயிர்களினூடே போக முடியாமல் கயல் மீன்கள் துள்ளுகின்றன. மாரீசன் மரங்கள்தோறும் ராமனைக் கண்டது போல இவர்கள் நெற்பயிரிலும் திரிவிக்கிரமனை காண்கிறார்கள்.
பூங்குவளைப்போதில்: பூத்திருக்கும் குவளை மலர்களில்
பொறிவண்டு கண்படுப்ப: அழகான வண்டுகள் படுத்துறங்க
இதுவரை வயல்வளம் சொல்லப்பட்டது. இனி, ஊர் வளம் சொல்லுகிறாள்.
தேங்காதே புக்கிருந்து:  பால் நிற்காது சுரந்துகொண்டே இருக்கும் ஆதலால், அசையாத பொருட்களைப் போல இருந்து பால் கறக்க வேண்டும்.
சீர்த்தமுலை: இரண்டு கைகளாலும் அணைத்துக் கறக்க வேண்டிய பருத்த முலைகள்.
பற்றி வாங்க குடம் நிறைக்கும்: அப்படி கறக்கக் கறக்க குடங்கள் நிறையும் படி.
வள்ளல்: குடம் குடமாகப் பாலைக் கொடுக்கும் வள்ளல்கள் இந்தப் பசுக்கள். தன்னை நம்பியவர்களுக்கு பூரணமாக கொடுக்கும் பகவான் போல இந்தப் பசுக்கள்.
பெரும் பசுக்கள்: கண்ணனுடைய திருக்கைகள் பட்டதாலேயே பெருத்திருக்கும் பசுக்கள்.
நீங்காத செல்வம் நிறைந்து: செல்வம் என்பது நீங்காமல் இருக்குமோ எனில், நமது பாவ புண்ணியமடியாக வந்த செல்வம் நீங்கும். ‘பாவம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள் யாரானாலும் அருள வேண்டும்’ என்னும் பிராட்டி அருளால் வந்த செல்வம் நீங்காது என்கை.
இப்பாட்டால் விபவ வைபவத்தைப் பாடினார்கள். தங்களுக்கு நோன்பு செய்ய அனுமதி அளித்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலத்தைச் சொல்லுகிறார்கள்.  முதல் பாட்டிலிருந்தே தாயாருடன் கூடிய எம்பெருமானை சொல்லுகிறார்கள். பிராட்டியின் அருள் பெற்ற பரிசனங்கள் இவர்கள். பிராட்டியின் அருள் பெற்றவர்களால் நாம் பெறும் செல்வம் நீங்காத செல்வமாகும், இல்லையோ? இப்படிப்பட்டவர்கள் வாழும் நாடு வியாதி,பஞ்சம், திருட்டு முதலிய தீங்குகள் இன்றி வளம் கொழிக்கும்.






3 கருத்துகள்:

  1. உலகளந்த உத்தமனை உலகளந்த பெருமாள் கோயிலில் பார்த்துள்ளேன். அருமையான பெருமாள். பாடலை ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஓங்கி உலகளந்த பாசுரத்திற்கு மிக அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் ரஞ்சனி. மார்கழி மாதத்திற்கு ஏற்றப் பதிவு.
    வாழ்த்துக்கள்!
    தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கம். தமிழ்மணம் வாக்களித்து பாராட்டுகிறேன்!

    :)))

    பதிலளிநீக்கு